குடவாசல்:
குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
மின்வாரிய ஊழியர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆலமன்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது50). இவர் வலங்கைமான் மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவர் தனது அலுவலகத்தில் பணி புரியும் திருவிடைமருதூர் திருவிசநல்லூர் சன்னதி தெருவை சேர்ந்த முத்து மகன் விக்னேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருவாரூர் சென்று விட்டு வலங்கைமானுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அர்ஜூனன் ஓட்டிவந்தார்.
சிகிச்சை பலனின்றி சாவு
குடவாசலை அடுத்த மணக்கால் அருகே சென்ற போது எதிரே வலங்கைமான் அணியம்பேட்டை பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஜெய்சங்கர்(54). என்பவர் ஓட்டி வந்த விபத்துகளில் சிக்கும் வாகங்களை எடுத்தும் செல்லும் சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் அர்ஜூனனும், விக்னேசும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அர்ஜூனன் பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.