வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அக்காள் கண்முன்னே பெண் பலியானார்.
வாகனம் மோதியது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சாணாம்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பம்பையன் மகள் ஈஸ்வரி (வயது 48). இவரும், இவரது அக்காள் சின்னப்பொண்ணு என்பவரும் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் மல்லிகை பூ விவசாயம் செய்துள்ளனர். தினந்தோறும் அவர்கள் காலை 6 மணிக்கு பூ பறிக்க செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல் காலை 6 மணிக்கு பூ பறிப்பதற்காக தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கலில் இருந்து மதுரை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஈஸ்வரி மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
பரிதாப சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தனது கண் முன்னே தங்கை ஈஸ்வரி இறந்ததை பார்த்து அவர் கதறி அழுதார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்தியபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.