தமிழக செய்திகள்

வாட்ஸ்-அப் பழக்கத்தால் விபரீதம்: வெளிநாட்டு வேலை, மர்ம ஆசாமியை நம்பி சென்ற பெண்: ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டுவதாக கணவர் பரபரப்பு புகார்

வெளிநாட்டு வேலைக்காக மர்மஆசாமியை நம்பி சென்ற பெண் கடத்தப்பட்டார். ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டல் வருவதாக பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

குமரி மாவட்டம் பரசேரி பகுதியைச் சேர்ந்தவர் நாகம்பிள்ளை (வயது 57). இவர் சுங்கான்கடை அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி உஷா (50). இவருக்கும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் வாட்ஸ்-அப் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது லண்டனுக்கு வாருங்கள், உங்களுக்கு நல்ல வேலை வாங்கி தருகிறேன் என அந்த ஆசாமி உஷாவிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இந்த பேச்சை நம்பிய உஷா வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்று விட்டார்.

இதனால் உஷாவை காணாமல் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே நேற்று காலையில் உஷா, தன்னுடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவரிடம் செல்போனில் பேசியிருக்கிறார். அப்போது அவர் டெல்லி விமான நிலையத்தில் இருப்பதாக கூறினாராம். பின்னர் அவர் பேசி முடித்த உடனே உஷாவின் மகளுக்கு மர்மஆசாமி ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டார்.

எதிர்முனையில் பேசிய நபர், நாங்கள் கூறியதை போன்று உங்கள் தாயார் ரூ.1 லட்சத்தை தரவில்லை. உடனே அந்த பணத்தை கட்டவில்லையென்றால் உங்களது தாயாரை வேறு நாட்டிற்கு அனுப்பி வைத்து விடுவோம் என கூறி இணைப்பை துண்டித்து விட்டார். பின்னர் தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் உஷா கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் குடும்பத்தினரிடையே ஏற்பட்டது.

மேலும் இதுகுறித்து உஷாவின் கணவர் நாகம் பிள்ளை இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடந்து வருகிறது. அதே சமயத்தில் இதுதொடர்பாக டெல்லி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷாவை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு வேலைக்காக மர்மஆசாமியை நம்பி சென்ற பெண் கடத்தப்பட்டதாக வெளியான சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை