சென்னையை அடுத்த கொளத்தூரை சேர்ந்த 28 வயது இளம்பெண், திருமணமாகி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். 2020-ம் ஆண்டு அவருக்கு முகநூல் மூலம் திருநின்றவூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த விக்ரம்(வயது 33) என்பவர் அறிமுகமானார்.
அப்போது விக்ரம், இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விக்ரமுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண், விக்ரமுடனான தொடர்பை துண்டித்தார்.
இந்தநிலையில் விக்ரம், "எனக்கு ரூ.10 லட்சம் தரவேண்டும். இல்லாவிட்டால் நாம் ஒன்றாக இருக்கும் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன்" என இளம்பெண்ணை மிரட்டினார். இது குறித்து இளம்பெண் அளித்த புகாரின்பேரில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்ரமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.