தமிழக செய்திகள்

தனியார் டி.வி.க்கான அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு; ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

தனியார் டி.வி.க்கு அன்னிய முதலீடு பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் சென்னை வீடு உள்பட 14 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

தினத்தந்தி

சென்னை,

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை நோட்டீசு

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் நிதி மந்திரியாகவும், பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் பணியாற்றியவர் ப.சிதம்பரம். அவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஆவார். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த காலக்கட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பியது. அதுதொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டது. தற்போது, சி.பி.ஐ. போலீசார் புதிதாக ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர்முகர்ஜி ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்றும், சி.பி.ஐ. போலீசார் தற்போது பதிவு செய்துள்ள வழக்கில் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வழக்குப்பதிவு

சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி, பீட்டர்முகர்ஜி, செஸ் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் கார்த்தி சிதம்பரம், அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டிஜிக் ஆலோசனை நிறுவனத்தின் இயக்குனர் பத்மா விஸ்வநாதன் மற்றும் மத்திய அரசின் நிதி அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதாவது இந்திய தண்டனை சட்டம் 120-பி (கூட்டு சதி), 420 (மோசடி), மற்றும் ஊழல் தடுப்புச்சட்ட பிரிவுகள் 13 (2), 13 (1) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீட்டுக்கான அனுமதி பெற்றுத்தந்ததில் கமிஷன் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் இயக்குனராக செயல்படும் செஸ் மேலாண்மை சேவை நிறுவனம், பத்மா விஸ்வநாதனை இயக்குனராக கொண்ட அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டிஜிக் ஆலோசனை நிறுவனம் ஆகியவற்றின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு தவணையாக பல லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டெல்லி சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்தசாரதி இந்த வழக்கை பதிவு செய்துள்ளார்.

அதிரடி சோதனை

நேற்று முன்தினம் சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று காலை இந்த வழக்கு தொடர்பாக இந்தியா முழுவதும் டெல்லி, மும்பை, நொய்டா மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் 14 இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் எதிரே பை-கிராப்ட்ஸ் சாலையில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டிற்கு, ஒரு டி.ஐ.ஜி. தலைமையில் 10 சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று காலை 7.30 மணியளவில் சென்றனர். அப்போது ப.சிதம்பரம் வீட்டில் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம், அவர்கள் தாங்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் என்றும், ஒரு வழக்கு சம்பந்தமாக வீட்டில் சோதனை நடத்த வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

முறைகேடு தொடர்பாக கேள்வி

இதுகுறித்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார், கார்த்தி சிதம்பரத்திடம் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ. அதிகாரிகளை வீட்டுக்குள் அனுமதித்தார். அப்போது ப.சிதம்பரம் வீட்டில் இல்லை. அவரது மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி, ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

சி.பி.ஐ. அதிகாரிகள் வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சுமார் 6 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்திடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். இந்த சோதனை குறித்து கேள்விப்பட்டதும் ஏராளமான பத்திரிகை நிருபர்கள், தனியார் தொலைக்காட்சி நிருபர்கள், கேமராமேன்கள் ப.சிதம்பரம் வீட்டில் குவிந்தனர்.

அறிக்கை

சோதனை நடந்து கொண்டிருந்த போது கார்த்தி சிதம்பரம் அரைக்கால் டவுசர்(ஷார்ட்ஸ்) அணிந்தபடி வீட்டில் இருந்து வெளியே வந்து முறைகேடு குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து தனது தந்தை ப.சிதம்பரம் பெயரிலான அறிக்கையை பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்களிடம் அளித்தார்.

சோதனையின் போது வெளி ஆட்கள் யாரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. சோதனையில் ஈடுபட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் 2 பேர் பகல் 11.30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியேறினர். சோதனை குறித்து நிருபர்கள் அவர்களிடம் கேள்வி கேட்டபோது அவர்கள் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

கண்கலங்கினர்

பிற்பகல் 1.30 மணியளவில் சோதனை நடத்திய அதிகாரிகள் அனைவரும் ப.சிதம்பரம் வீட்டில் இருந்து வெளியேறினார்கள். அப்போது சோதனைக்கு கார்த்தி சிதம்பரம் முழு ஒத்துழைப்பு அளித்ததாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கார்த்தி சிதம்பரத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் காரில் உடன் அழைத்துச் செல்வதற்காக வீட்டுக்குள் இருந்து அழைத்து வந்தனர். அப்போது அவர் வேட்டி, சட்டையுடன் வெளியே வந்தார்.

வீட்டின் முன்பு கூடியிருந்த ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் போலீசாரின் தடுப்பையும் மீறி உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள், கார்த்தி சிதம்பரத்தின் கையை பிடித்துக்கொண்டு, எதற்கும் பயப்பட வேண்டாம். நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம் என்று கூறினர். அப்போது கார்த்தி சிதம்பரம், எதுவும் நடக்காது. நீங்கள் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றார்.

கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தபோது நளினி சிதம்பரம், ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் ஆகியோரும் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தனர். கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் காரில் அழைத்து செல்வதை பார்த்து அவர்கள் கண்கலங்கினர்.

அலுவலகத்தில் சோதனை

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

பல்வேறு ஆவணங்களை காட்டி கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடைபெற்றது. அவரது வாக்குமூலத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்தனர்.

கார்த்தி ப.சிதம்பரத்தின் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் இரவு 8.30 மணி வரை சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சீலிட்டு எடுத்துச் சென்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்