தமிழக செய்திகள்

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை நடைமுறைப்படுத்த துரித நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி தகவல்

வளர்ச்சிப் பணிகளை நடை முறைப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #Chennai #tamilnews

சென்னை,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளை நடை முறைப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை அண்ணாநகரில் உள்ள சி.கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் பச்சையப்பன் அறக்கட்டளையின் சார்பில் அம்மா அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அந்த அரங்கத்தை நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

அந்த அரங்கத்தின் முதல் நிகழ்ச்சியாக 21 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஒரு நாடு சிறந்து விளங்க கல்வியும், சுகாதாரமும் அவசியமாகும். பச்சையப்பன் அறக்கட்டளை மூலம், சென்னை, காஞ்சீபுரம், கடலூர் மற்றும் சிதம்பரம் ஆகிய இடங்களில் 6 கல்லூரிகளும், 6 உயர்நிலைப்பள்ளிகளையும் நிறுவி, கல்விப்பணியை சிறப்பாக செய்து வருவதை மனதார பாராட்டுகிறேன்.

தமிழகத்தில் 30 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்கள் நடத்தப்பட்டு, அந்தந்த மாவட்ட மக்களுக்கு நன்மை தரும் வளர்ச்சிப் பணிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு, அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆறு ஆண்டுகளில் பள்ளிக்கல்வி துறைக்கு நிதி ஒதுக்கீடு சுமார் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 261 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 599 பள்ளிகள் கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு நிலைகளில் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.

மாணவர் சேர்க்கை தொடக்கக்கல்வி நிலையில் 99.85 சதவீதம், நடுநிலை கல்வியில் 99.20 சதவீதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.