தமிழக செய்திகள்

1983-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983-ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தனிநபர்கள், அமைப்புகள் என்று 25 பேர் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர். அதேபோல, இந்தச் சட்டத்தை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

மக்கள்தொகை

இந்நிலையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் செயலாளர் ஏ.எம்.ஆண்டியப்பன் தாக்கல் செய்துள்ள பதில்மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என தெரிவித்ததன் அடிப்படையிலேயே, இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முறையே 7 மற்றும் 2.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆணையம் பரிந்துரைத்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு அதிகாரம்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983-ம் ஆண்டு நடத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் வன்னியர்கள் 13.01 சதவீதம் உள்ளனர். அந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையிலேயே, இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கடைசி நிமிடம் வரை கொள்கை முடிவு எடுக்கவும், சட்டம் இயற்றவும் அதிகாரம் உள்ளது. இதில், அரசியல் காரணங்களோ, அவசரமோ ஏதுமில்லை.

நீதிபதி விலகல்

மற்ற சாதியினர் இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவர் என மனுதாரர்கள் கூறுவது வெறும் கற்பனையே. இந்த சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும் அதிகமான இடஒதுக்கீடு வழங்கியதாக கருத முடியாது. அரசியல் சட்டத்தைப் பின்பற்றியே இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளதால், 10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி ஆதிகேசவலு விலகுவதாக கூறினார். அதையடுத்து வேறு நீதிபதியுடன் இந்த வழக்குகளை விசாரிப்பதாக கூறிய தலைமை நீதிபதி, விசாரணையைதள்ளிவைத்தார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்