சென்னை,
பொது திட்டங்களுக்காக பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை பேணும் வகையிலும், மறுகுடியமர்வுக்காகவும் மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு சட்டத்தை கொண்டு வந்தது.
இந்த சட்டத்தில் இருந்து தமிழக அரசு மாறுபட்டு, கூடுதலாக சில விதிவிலக்குகளை அளிப்பதற்காக கடந்த 2015-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டப்பிரிவு 105(ஏ)-ஐ புதிதாக கொண்டு வந்தது.
இதன்படி மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டிற்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் ஆதிதிராவிடர் நலச்சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு புதிய சட்டப்பிரிவுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கருணாநிதி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டப்பிரிவு தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் கருத்து கேட்புகூட்டம் கூட நடத்தவில்லை. நிலம் கையகப்படுத்த போதிய விதிகள் சட்டத்தில் கூறப்படவில்லை. இந்த சட்டத்தால் நில உரிமையாளர்களுக்குத்தான் அதிகமான பாதிப்புகள் உள்ளது என்று வாதிட்டனர்.
மேலும், மத்திய அரசு சட்டத்தில், கையகப்படுத்தும் நிலத்தின் மதிப்பில் 2 மடங்கு வரை இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய நிலத்தை கையகப்படுத்தக்கூடாது போன்ற விதிகள் உள்ளன. ஆனால், இவை தமிழக அரசு சட்டத்தில் இல்லை. சட்டசபையில் அறிவிக்கை தாக்கல் செய்யாமல் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
இந்த 3 விதமான நில எடுப்பு சட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்றால் அவற்றுக்காக தனியாகத்தான் சட்டம் இயற்ற வேண்டும். அவற்றை நிலம் கையகப்படுத்துதல் சட்டம் பிரிவு 105(ஏ)-க்குள் சேர்க்க முடியாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆகியோர் ஆஜராகி, தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டத்தை ரத்து செய்தால் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிக்கப்படும் என்று வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசு கடந்த 2015-ம் ஆண்டு கொண்டு வந்துள்ள சட்டப்பிரிவு 105(ஏ) அரசியல் சாசனத்துக்கு எதிரானது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு முரணாக இந்த சட்டப்பிரிவு உள்ளது. எனவே நாங்கள் அதை செல்லாது என அறிவித்து ரத்து செய்கிறோம்.
மேலும், இந்த புதிய சட்டப்பிரிவை பயன்படுத்தி, நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தால் அந்த நடவடிக்கை அனைத்தும் செல்லாது. நிலம் கையகப்படுத்தப்பட்ட அந்த நடவடிக்கைகளையும் ரத்து செய்கிறோம். அதேநேரம், இந்த புதிய சட்டத்தை பயன்படுத்தி ஏற்கனவே நிலஆர்ஜிதம் செய்து, அந்த இடத்தில் திட்டப்பணிகள் முடிவடைந்து இருந்தால், அப்பணிகளுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.