சென்னை,
வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2010-ம் ஆண்டு விலங்கியல் பிரிவில் இணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் 3 கல்வி நிறுவனங்களில் பணியாற்றியதாக போலியான அனுபவ சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் விரிவான விளக்கத்தை அளித்தார். அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதிகாரம் இல்லை
இந்தநிலையில், திடீரென கடந்த ஆண்டு பன்னீர்செல்வத்தின் மீது பல்கலைக்கழக பதிவாளர் குற்றச்சாட்டு குறிப்பாணையை பிறப்பித்தார்.
அதை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பன்னீர்செல்வம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில், பல்கலைக்கழக விதிகளின்படி, குற்ற குறிப்பாணை பிறப்பிக்க பதிவாளருக்கு அதிகாரம் இல்லை. தான் விளக்கம் அளித்து 6 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த குறிப்பாணையை உள்நோக்கத்துடன் அனுப்பியுள்ளனர் என்று கூறியிருந்தார்.
விசாரணை அதிகாரி
அதற்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விரிவான பதில்மனுவை தாக்கல் செய்தார். அதில், மனுதாரர் 3 கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளதாக போலியான ஆவணங்களை உருவாக்கியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க கிருஷ்ணன் என்பவரை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளோம். போலி அனுபவ சான்றுகளை சமர்ப்பித்த மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க சிண்டிகேட் கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
புனிதமான பணி
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மனுதாரர் அளித்தது போலி சான்றிதழா இல்லையா என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும். எனவே, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை தினசரி அடிப்படையில் மேற்கொண்டு, சுதந்திரமான முடிவை விசாரணை அதிகாரி எடுக்க வேண்டும். இந்திய சமுதாயத்தில், ஆசிரியர் பணி என்பது புனிதமானது, இறைவனுக்கு இணையாக கருதக்கூடியது. அதனால்தான் குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு மகேஸ்வரா என்று ஆசிரியரை அழைக்கிறோம். எனவே, இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை. வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.