தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் சாலைகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள சாலைகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் பழைய சாலைகளை அகற்றாமல், அதற்கு மேல் புதிய சாலை அமைக்கப்படுவதால், சாலையின் உயரம் அதிகரிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் வெள்ள அபாயம் ஏற்படும். எனவே சாலைக்கு மேல் சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் முரளி என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், சென்னை மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. நல்ல நிலையில் இருக்கும் சாலைகளை தோண்டி மராமத்து செய்கின்றனர். பழுதான சாலைகள் அதே நிலையில்தான் உள்ளது. எந்த சாலையும் 6 மாதத்திற்கு மேல் நீடித்து நிலைப்பதில்லை என்று கருத்து கூறினர்.

மேலும், சென்னையில் மெரினா சாலை, அண்ணா சாலை, அடையாறு சாலை மட்டுமே நன்றாக உள்ளது. உட்புற சாலைகள் மோசமாக உள்ளது. சாலைகளை தோண்டும் நிறுவனங்கள் அதன்பிறகு அவற்றை முறையாக சீர்செய்வதில்லை. அவர்களிடம் சாலை சீரமைப்புக்கு தொகை வசூலிக்கப்படுகிறதே தவிர முறையாக செலவிடப்படுவதில்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.

பின்னர் நீதிபதிகள், இந்த வழக்கில் மாநில நெடுஞ்சாலைத்துறை செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். இவர்கள், சென்னை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை பராமரிப்பு மற்றும் புதிதாக சாலைகள் அமைக்க செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு? போன்ற விவரங்களுடன், சாலைகள் அமைக்க பின்பற்றப்படும் விதிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். விசாரணையை மார்ச் 11-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்