தமிழக செய்திகள்

மாமியாருக்கு ஆதரவாக செயல்பட்ட மருமகனுக்கு பொதுநல பதவி வழங்கக்கூடாது ஐகோர்ட்டு கருத்து

மாமியாருக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவரான மருமகனுக்கு, எதிர்காலத்தில் பொதுநலன் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வழங்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை,

மாமியாருக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவரான மருமகனுக்கு, எதிர்காலத்தில் பொதுநலன் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வழங்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

அவமதிப்பு வழக்கு

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, நந்திமங்கலம் பகுதியில் திட்ட அனுமதியை மீறி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக, அதே ஊரை சேர்ந்த ரவாம்மாள் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு விதிமீறல் பகுதியை இடிக்க கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தாததால், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவள்ளி உள்பட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ரவாம்மாள் தொடர்ந்தார்.

மாமியாருக்கு ஆதரவு

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, கோர்ட்டு உத்தரவின்படி, ஏற்கனவே விதிமீறல் பகுதி இடிக்கப்பட்டு விட்டது.

இது குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள பிரச்சினை. மனுதாரரின் மருமகன் லோகநாதன், நந்திமங்கலம் பஞ்சாயத்து தலைவராக இருந்தபோது, மாமியாருக்கு ஆதரவாக, ஒட்டுமொத்த கட்டிடத்தையும் இடிக்க கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இந்த மனுதாரர் ரவாம்மாள் வேறு ஒரு சர்வே எண்ணை குறிப்பிட்டு, ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது என்று கூறினார்.

விலகவேண்டும்

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த ஐகோர்ட்டின் உத்தரவின்படி, இடிக்கவேண்டிய பகுதி இடிக்கப்பட்டுவிட்டது. எனவே, இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

அதேநேரம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் லோகநாதன், மனுதாரர் ரவாம்மாளின் மருமகன் என்பது கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த ஆவணங்கள் மூலம் நிரூபணம் ஆகிறது. அதேநேரம், சொந்த பிரச்சினையில் யாரும் நீதிபதியாக இருக்க முடியாது. ஒருவேளை மாமியார் தொடர்பான பிரச்சினை குறித்து விசாரிக்க நேரிடும்போது, அவரே தாமாக முன்வந்து விசாரிக்கும் பொறுப்பில் இருந்து விலகி இருக்கவேண்டும். ஆனால், லோகநாதன் அவ்வாறு செய்யவில்லை.

பதவிகள் கூடாது

எனவே, எதிர்காலத்தில் பொறுப்புள்ள மற்றும் பொதுநலன் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் இவருக்கு வழங்கக்கூடாது என்று நாங்கள் கருதுகிறோம். அதனால், இந்த உத்தரவு நகலை, நந்திமங்கலம் பஞ்சாயத்து அதிகாரிகள், இந்த வழக்கின் எதிர்மனுதாரர்களாக உள்ள அதிகாரிகள் ஆகியோரது கவனத்துக்கு தெரிவிக்கும் விதமாக ஆங்கிலம் மற்றும் தமிழில் மாவட்ட கலெக்டர் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.