சென்னை,
கடந்த ஓராண்டில் 70 போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக பல் சீரமைப்பு நல தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பல் சீரமைப்பின் முக்கியத்துவத்தை குறிக்கும் விதமாக நடைபெற்ற பேரணியில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். பேரணியை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த ஓராண்டில் மட்டும் ஏறத்தாழ 70 போலி மருத்துவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுடைய கிளினிக் மூடப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல் மருத்துவத்திலும் போலி மருத்துவர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
அவர்களை அடையாளம் காட்டுவதற்கு அரசுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் குறித்த தகவல்கள் ரகசியமாக இருக்கும். மேலும், அந்த போலி டாக்டர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.