மதுரை,
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மாவட்ட சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் காவலர்களை நியமிக்கவும், மதுரை மத்திய சிறை நிர்வாகத்தின்கீழ் உள்ள 4 கிளைச்சிறைகளை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட சிறையில் கடந்த 26-ந்தேதி 17 கைதிகள் தப்பினர். இதற்கு மாற்றுத்திறனாளி கைதியான லிங்கபிரசாத் திட்டம் வகுத்துக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் கைதிகள் தப்பிச் செல்ல முடிவு செய்ததும் தெரியவந்தது. தப்பியோடிய 17 பேரும் பிடிபட்ட நிலையில், அவர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட உள்ளனர்.
மதுரை மத்திய சிறை நிர்வாகத்தின்கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட சிறைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் கட்டுப்பாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் மொத்தம் 22 கிளைச்சிறைகள் இருந்தன. காவலர்கள் பற்றாக்குறையால் தற்போது 13 கிளைச்சிறைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
மாவட்ட சிறைகளிலும் காவலர்கள் பற்றாக்குறை நிலவுவதால், கிளைச்சிறைகளில் பணியாற்றும் காவலர்களை மாவட்ட சிறைகளுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக தேனி மாவட்டம் உத்தமபாளையம், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகிய 4 கிளைச்சிறைகள் மூடப்பட உள்ளன.
இந்த சிறைகளில் உள்ள கைதிகள் அந்தந்த மாவட்ட சிறைகளுக்கு மாற்றப்படுவார்கள். அங்கு பணியாற்றும் காவலர்களும் ஆள் பற்றாக்குறை உள்ள மாவட்ட சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதன் மூலம் மாவட்ட சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.