சென்னை,
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின், ஊடகம் மற்றும் தொழில் நுட்பக் கொள்கை வருமான வரித்துறை ஆணையர் வி.ரஜிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான செல்வப்பெருந்தகை, கடந்த 20-ந்தேதி சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று வருமான வரித்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.
அதில், வருமான வரித்துறை அதிகாரிகள் "சோதனை” என்ற பெயரில், தன்னைத் தொகுதிக்குள் சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாகவும், தனது அரசியல் பணிகளைச் செய்வதற்கும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் தடையாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதே குற்றச்சாட்டுகளை அவர் அன்றைய தினம் பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் மீண்டும் தெரிவித்திருந்தார்.
மேலும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செல்வப்பெருந்தகையின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த செய்திகள் வருமான வரித்துறையினால் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டன. இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மையற்றவை.
20-ந்தேதி அல்லது அதற்கு சமீபத்திய தேதிகளிலோ செல்வப்பெருந்தகைக்கு எதிராக வருமான வரித்துறை யினரால் எந்தவிதமான சோதனையோ, ஆய்வோ அல்லது அமலாக்க நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை என் பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும், அவரது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் உள்பட எந்தவொரு இடமும் வருமான வரித்துறையின் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. கணக்கில் வராத பணம் கொண்டு செல்லப்படுவதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத் தகவல்களின் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதூரின் சில பகுதிகளில் வருமான வரித்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட வரம்பிற்குட்பட்ட சரிபார்ப்புப் பணிகள் முறையான அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டன.
இதற்கும் செல்வப்பெருந்தகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செல்வப்பெருந்தகை கூறியுள்ள தவறானமற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய தகவல்கள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக தவறான தகவல்களைப் பரப்பியது மற்றும் அரசுத்துறை மீது அவதூறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது ஆகியவற்றுக்காக சம்பந்தப்பட்ட நபர் மீது தகுந்தசட்ட நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறை கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.