திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் தொழில்நகரம் நிறைந்த மாவட்டம் ஆகும். இதுபோல் இங்கு பின்னலாடை தயாரிப்பு தொழில் பிரதான தொழிலாக இருந்து வருவதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூரில் வேலை செய்து வருகிறார்கள். இதுபோல் வெளிமாநிலம், வெளிமாவட்டம் என பல்வேறு பகுதிகளில் இருந்து ரெயில் மூலம் தினமும் பலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இதன் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வந்து கொண்டிருகிறது. மீண்டும் பாதிப்பு ஏறுமுகமாக உள்ளதால், கொரோனாவை கட்டுப்படுத்த ரெயில்வே நிர்வாகம் நடைமேடை கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
ரெயில் நிலையத்திற்கு பயணம் செய்பவர்கள் விட அவர்களை வழியனுப்புவதற்கு உறவினர்கள் ஏராளமானவர்கள் வருவது வழக்கம். இதனால் பயணம் செய்பவர்களை விட வழியனுப்ப வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால், இதனை கட்டுப்படுத்தும் விதமாக ரெயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் தற்போது ரூ.15-ஆக இருந்தது.
இன்று (சனிக்கிழமை) முதல் கட்டணம் மேலும் ரூ.35 உயர்த்தப்பட்டு, ரூ.50 ஆக வசூலிக்கப்படும். சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.