தமிழக செய்திகள்

நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணை

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

செங்கல்பட்டு,

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் இன்று (ஏப்ரல் 20) விசாரணைக்கு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. அவர் தனது குழந்தைகளின் கல்விக்காக வெளிநாட்டில் தங்கியிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதன்முதலில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, பின்னர் இன்றைய தேதிக்கு (ஏப்ரல் 20) தள்ளிவைக்கப்பட்டது. சங்கீதா தாக்கல் செய்த மனுவில் சில அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்ததாகவும், அதனால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், 2021-ம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் வசித்தாலும் இருவரும் தனித்தனியாகவே வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய்யிடமிருந்து ஏதேனும் அழுத்தம் வந்தால் சம்பந்தப்பட்ட அந்த நடிகை யார் என்கிற விவரங்களை நீதிமன்றத்தில் வெளியிட நேரிடும் என்றும் அந்த மனுவில் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக நடிகர் விஜய் இன்று நேரில் ஆஜராகுமாறு கோர்ட்டு ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. இதற்கிடையே, இரு தரப்பு வழக்கறிஞர்களும் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக, இருவரும் பரஸ்பரம் பிரிந்துவிடுவது (Mutual Consent) எனச் சுமூக முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கோர்ட்டில் இன்று விஜய் நேரில் ஆஜராவாரா அல்லது வழக்கறிஞர்கள் மூலம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பாரா என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT