நெல்லை,
சின்ன கலைவாணர் என்று போற்றப்படும் நடிகர் விவேக் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள பெருங்கோட்டூர் என்னும் கிராமம் ஆகும். அங்கு 1961-ம் ஆண்டு அங்கையா பாண்டியன் - மணியம்மாள் தம்பதிக்கு மகனாக விவேக் பிறந்தார்.
தற்போது அங்குள்ள பூர்வீக வீட்டில் விவேக்கின் சித்தி இந்திராபாய் வசிக்கிறார். அவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார்.
நடிகர் விவேக் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும், அவரது சொந்த ஊரான பெருங்கோட்டூர் கிராமமே சோகத்தில் மூழ்கியது. அவரது உறவினர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அங்கிருந்து உடனடியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
மேலும், பெருங்கோட்டூர் பொதுமக்கள் சார்பில் அங்குள்ள சமுதாயக்கூடம் முன்பு விவேக் உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்துக்கு கிராமமக்கள் மலர் மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சமுதாயக்கூடம் முன்பு நடிகர் விவேக்கின் நினைவாக மரக்கன்று நடப்பட்டது.
நடிகர் விவேக் குறித்து அந்த கிராத்தை சேர்ந்த காசி பாண்டியன் (வயது 45) கூறியதாவது:-
நடிகர் விவேக் அவருடைய தாயார் மணியம்மாள் மரணம் அடைந்தபோது, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊருக்கு கடைசியாக வந்திருந்தார். அப்போது கிராமத்தில் உள்ள குளத்தை தூர்வாரி, அதிக மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும், கோவிலுக்கு செல்லக்கூடிய பாதையை புனரமைக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார். இவ்வளவு உயர்ந்த நிலைக்கு சென்ற பிறகும் சொந்த ஊரை மறக்காத அவரது நல்ல மனம் எங்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் விவேக் சாதி, மத பேதம் பார்க்காமல் பழகக்கூடிய நல்ல மனிதர் என்றும், சிறந்த சமூக சேவகர் என்றும் புகழ் அஞ்சலி செலுத்தும் அவருடைய உறவினர்கள், அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று வேதனையுடன் தெரிவித்தனர்.