சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. டி.கே.ரங்கராஜன், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தனுக்கு எழுதிய கடிதத்தில், அக்குபஞ்சர்' சிகிச்சை முறைக்கு மத்திய அரசு இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை. இதனை கொரோனா சிகிச்சைக்கு மத்திய அரசு பயன்படுத்த வேண்டும். நமது நாட்டு மக்கள் பயன்பெறும் வகையிலான, இந்த பாரம்பரிய சிகிச்சை முறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, மேம்படுத்துவதற்கு இதுவே சரியான தருணம் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து, டி.கே.ரங்கராஜனுக்கு, சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நமது நாட்டில் அக்குபஞ்சர்' சிகிச்சை முறைக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் முறை சிகிச்சையிலோ அல்லது நவீன மருத்துவ சிகிச்சையிலோ பதிவு செய்யப்பட்ட டாக்டர்கள், தகுதிவாய்ந்த பல் டாக்டர்கள் தங்கள் சிகிச்சையில் அக்குபஞ்சர்' முறையை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர்களிடம், பிசியோதெரபி நிபுணர்களும் அக்குபஞ்சர்' சிகிச்சை முறையை கற்றறிந்து, பயிற்சியளிக்கலாம்.
அக்குபஞ்சர்' மருத்துவத்தை சுகாதார சிகிச்சை முறையாக ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவை அரசின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.