சென்னை,
சென்னை விமான நிலையத்தில் சில விமானங்களில் மட்டும் பயணிகள் ஏறி, இறங்குவதற்கு 'ஏரோபிரிட்ஜ்' எனப்படும் அதிநவீன நிரந்தர இணைப்பு பாலங்கள் உள்ளன. மற்ற விமானங்களில் பயணிகள் ஏறி இறங்க 'லேடர்' எனப்படும் நகரும் படிக்கட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நகரும் படிக்கட்டுகளால் மழைக்காலங்களில் பயணிகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விமானங்களில் ஏறி, இறங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் கூடுதல் ஏரோபிரிட்ஜ்கள் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.
தற்போது இருக்கும் ஏரோபிரிட்ஜகளில், அது இணைக்கப்பட்ட ஒரு விமானத்தில் தான் பயணிகள் ஏறி, இறங்க முடியும். ஆனால் புதிதாக அமைக்கப்படும் ஏரோ பிரிட்ஜ்கள் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்களின் பயணிகள் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.