தமிழக செய்திகள்

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட அ.தி.மு.க.வினர் கைது

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம்

மதுரைய அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்பது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது உள்ளூர் வாகனங்களுக்கும் கடந்த 2 ஆண்டுக்குரிய சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் கப்பலூர் வாகன ஓட்டிகளிடம் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கக்கூடாது என தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவாகவும், அங்குள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்.பி.உதயகுமார் திடீரென உண்ணாவிரத போராட்டம் அறிவித்தார்.

அதன்படி நேற்று ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு பந்தல் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்த திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் மற்றும் போலீசார், உண்ணாவிரத போராட்டத்திற்கு முறையாக அனுமதி பெறவில்லை. எனவே பந்தல் அமைக்க கூடாது என தெரிவித்தனர்.

ஆர்.பி.உதயகுமார் கைது

இதையடுத்து ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் மற்றும் கிராம மக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உசிலம்பட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மீனவர் அணி செயலாளர் சவுடார்பட்டி சரவணன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது போலீசார், உரிய அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தக்கூடாது. போராட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்றனர்.

ஆனால் போராட்டத்தை அவர்கள் கைவிடாததால், ஆர்.பி.உதயகுமார் உள்பட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றினர். மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் ராஜன் செல்லப்பா (திருப்பரங்குன்றம்), பெரியபுள்ளான் (மேலூர்), முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன், திருமங்கலம் நகர் செயலாளர் விஜயன் ஆகியோர் இந்த போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர். அப்போது அ.தி.மு.க.வினர் சிலரை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் பஸ்சில் ஏற்றினர். இதனால் சுங்கச்சாவடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நடவடிக்கை இல்லை

முன்னதாக ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் கேட்டு பிரச்சினை செய்து வருகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது கப்பலூர் மற்றும் திருமங்கலம் நகர் வாகன ஓட்டிகளுக்கு 2 ஆண்டு சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என நோட்டீசு அனுப்பி உள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவேதான் சுங்கச்சாவடியை அகற்ற மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம்.

ஆனால் போலீசார் அதற்கு அனுமதி மறுக்கின்றனர். தேர்தல் வாக்குறுதியின் போது கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது வரை அதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. உடனடியாக கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற வேண்டும், என்றார். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்