ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நத்தம் சாலையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குப்புச்சாமி தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.
மக்கள் ஆதரவு
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். விலகிய பிறகு அ.தி.மு.க. உதயமானது. அதன் பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் 6 தொகுதியில் அ.தி.மு.க. அபார வெற்றி பெற்றது. இது, எம்.ஜி.ஆருக்கு மக்கள் தந்த பரிசு.
மக்களின் பேராதரவை பெற்ற எம்.ஜி.ஆர்., 3 முறை தமிழக முதல்-அமைச்சராக இருந்தார். இதேபோல் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் 5 முறை தமிழக முதல்-அமைச்சராக இருந்தார்.
இவர்களை தொடர்ந்து தற்போது அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மக்களின் ஆதரவை பெற்றுள்ளார்.
அராஜக செயல்
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்துகொண்டே கட்சிக்கு எதிரானவர்களிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். கட்சி பொதுக்குழுவை நடத்த கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார்.
கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து அராஜக செயலில் ஈடுபடுகிறார். இதனால் தொண்டர்கள் ஆதரவை இழந்த அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு எதிராக அவர் எதை செய்தாலும் அதனை முறியடித்து கட்சியை ஜெயலலிதா காட்டிய வழியில் எடப்பாடி பழனிசாமி வழிநடத்தி செல்வார்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி
அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் தேர்வு செய்வார்கள். நமக்கு இப்போது ஒரே எதிரி என்றால் அது தி.மு.க. தான்.மு.க.ஸ்டாலின் தான்.
தி.மு.க. அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் வருகிற 25-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும். நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டு அடுத்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிம்ம சொப்பனம்
அதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-
அ.தி.மு.க.வை எதிர்ப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர் எடப்பாடி பழனிசாமி. அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு தொண்டர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அ.தி.மு.க.வுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க வைத்தது திண்டுக்கல் மாவட்டம் தான். தற்போது தமிழகத்தில் விடியல் ஆட்சி நடக்கவில்லை. மக்கள் விரோத மற்றும் ஊழல் ஆட்சி தான் நடந்து வருகிறது. மு.க.ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டார்.
தடை நீங்கியது
ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கூறிவருகிறார். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனை நாம் மக்களுக்கு எடுத்துச்சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் அடுத்து நடக்கும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெற செய்ய முடியும். எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவு முழுமையாக உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வுக்கு தடையாக இருந்து வந்துள்ளார். தற்போது அந்த தடை நீங்கிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்..
கலந்துகொண்டவர்கள்
கூட்டத்தில், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதிமுருகன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வி.டி.ராஜன், அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளிதரன், கிழக்கு பகுதி அவைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் பிரபு, வடக்கு பகுதி மாவட்ட பிரதிநிதி செல்வராஜ், துணை செயலாளர் மோகன்தாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில் இக்பால், திண்டுக்கல் மேற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அப்துல் ரகீம், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயாலாளர் ஆர்.வி.என்.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்தையா, கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வேலவன், மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சிலைகளுக்கு மாலை
கூட்டம் நிறைவடைந்ததும் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் தலைமையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே உள்ள அண்ணா சிலை மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலை ஆகியவற்றுக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.