தமிழக செய்திகள்

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க.: “அ.தி.மு.க.வின் மக்கள் செல்வாக்கை மு.க.ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை” - எடப்பாடி பழனிசாமி பேச்சு

‘ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. தான்’ என்றும், ‘அ.தி.மு.க.வுக்கு உள்ள மக்கள் செல்வாக்கை மு.க.ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை’ என்றும் சென்னையில் நடந்த அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தினத்தந்தி

சென்னை,

அ.தி.மு.க. தென்சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை சாலிகிராமம் தசரதபுரம் அருணாசலம் சாலையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்தன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று ஏழை-எளிய மக்களுக்கு தையல் எந்திரங்கள், சலவை எந்திரங்கள், 3 சக்கர சைக்கிள், தண்ணீர் டிரம்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

என்னை வழிநடத்தும் தெய்வமான அண்ணா எனும் சக்தியே என் வெற்றிக்கு காரணம் என்று முழங்கியவர், எம்.ஜி,ஆர். மகாத்மா காந்தியின் வாழ்க்கையே அவரது செய்தி என்பார்கள். அதுபோல அண்ணாவின் வாழ்க்கையும் நமக்கான செய்தியாகும் என்றார். எம்.ஜி.ஆர். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அவரது முழக்கம் எப்போதும் நமது செவிகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது.

அண்ணாவின் பெருந்தன்மை அகில உலக புகழ்பெற்றது. அண்ணாவின் சகிப்புத்தன்மை இமாலய பெருமை கொண்டது.

வெளிநாட்டு பயணத்தை குறைகூறுவதா?

என் வெளிநாட்டு பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். நான் சுற்றுலா பயணம் மேற்கொண்டதாக கொச்சைப்படுத்துகிறார். மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை.

மற்ற மாநில முதல்-மந்திரிகளெல்லாம் தங்கள் மாநில வளர்ச்சிக்காக வெளிநாடு பயணம் போகும்போது, நாம் இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தால் எப்படி தொழில் வரும்? தொழில் வளர்ச்சி எப்படி பெருகும்? படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை எப்படி கிடைக்கும்? பொருளாதாரம் எப்படி மேம்பாடு அடையும்? இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் அங்குள்ள தமிழர்களின் அழைப்பை ஏற்று நாங்கள் வெளிநாடு சென்றோம். வெளிநாடுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி தமிழகத்தில் இருக்கும் 35 ஆயிரத்து 520 பேருக்கு வேலை கிடைக்கும். அதற்காகத் தான் நான் வெளிநாடு சென்றேன்.

இந்த ஆண்டில் நடந்த இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், ரூ.3 லட்சத்து 410 கோடி அளவில் தொழில் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். 304 தொழிற்சாலைகள் வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். இது மு.க.ஸ்டாலினுக்கு பொறுக்கவில்லை. ரோட்டில் போகிறவர்களை கூப்பிட்டு கோட் சூட் போட்டு மாநாட்டில் அமர வைத்திருக்கிறார்கள் என்று கொச்சைப்படுத்தி பேசினார். அந்த தொழில் அதிபர்கள் என்னை சந்தித்து வேதனை, ஆதங்கம் தெரிவித்தார்கள்.

தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் 16 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஆனால் அ.தி.மு.க. அரசில் மின்வெட்டு சீராகி தடையில்லா மின்சாரம் வழங்குகிறோம். உபரி மின்மிகை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சட்டம்-ஒழுங்கு சீராக இருப்பதாலும், மின்மிகை மாநிலமாக விளங்குவதாலும் உலக முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி தொழில் தொடங்க வருகிறார்கள்.

நீர் மேலாண்மை பற்றியும் மு.க.ஸ்டாலின் குறைகூறி வருகிறார். நீர்மேலாண்மை பற்றி எதுவுமே தெரியாத மு.க.ஸ்டாலின், தொடர்ந்து கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் என்று புலம்பிக்கொண்டே இருக்கிறார். தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு ஏரியாவது தூர்வாரப்பட்டதா? நீர்மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தும் அரசு இது. மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு சிறப்பான செல்வாக்கு உள்ளது. இதை பொறுக்கமுடியாத மு.க.ஸ்டாலின் பொய் செய்திகளை பரப்புகிறார்.

நான் விவசாயி குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால், விவசாயிகளின் எண்ணங்களை புரிந்து ஒவ்வொரு விஷயத்தையும் எண்ணி எண்ணி பார்த்து திட்டத்தை செயல்படுத்துகிறோம். இஸ்ரேலில் நீர்மேலாண்மை சிறப்பாக கையாளுகிறார்கள் என்பதால் மீண்டும் வெளிநாடு போவேன் என்றேன். உடனே மு.க.ஸ்டாலின் விமர்சிக்கிறார். எதை பேசினாலும் முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்கள். யாரோ எழுதி கொடுப்பதை பேசாதீர்கள்.

எப்போது பார்த்தாலும் கமிஷன் நினைப்பிலேயே இருப்பதால் மு.க.ஸ்டாலின் எங்கு பார்த்தாலும் கமிஷன், கரப்ஷன் என்று பேசிக்கொண்டே இருக்கிறார். தி.மு.க.வின் நினைப்பு முழுவதும் ஊழலிலேயே மூழ்கி இருக்கிறது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. மட்டுமே. அ.தி.மு.க. அரசை குறைகூறுவதற்கு தி.மு.க.வுக்கு என்ன தகுதி இருக்கிறது? எங்களது வெளிநாட்டு பயணம் மக்களுக்கு பயனுள்ள பயணமாக அமைந்திருக்கிறது. விரைவில் வெளிநாடுகளில் உள்ளது போல ஒரு பிரமாண்ட நகரத்தை சென்னையில் உருவாக்கி காட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு