பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாசலம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சியின் மாவட்ட மாணவரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எம்.என்.ராஜாராம் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.