சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் தேசிய பேரிடர் மேலாண்மை கூடுதல் செயலாளர் வி.திருப்புகழ் தலைமையிலான மத்திய குழுவினர் நேற்று 3-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜெயலலிதா உள் விளையாட்டு அரங்கத்தில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பு நிவாரண பொருட்கள் சேகரிப்பு மற்றும் வினியோக மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ராயபுரம் சென்ற குழுவினர், குழந்தைகள் காப்பகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எந்த அளவிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது? பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வி மேம்பாட்டு பயிற்சிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
அதைத் தொடர்ந்து சென்னை அபிராமபுரத்தில் 30 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அப்போது, வங்கியை சுத்தமாக வைத்துக்கொள்ள என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதை கேட்டறிந்ததுடன், காசாளர் மக்களிடையே நேரடியாக தொடர்பு கொள்வதால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் கேட்டறிந்தனர். மேலும், வங்கியை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறைகள் கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
சென்னை மாநகராட்சியில் வெளியூர் செல்வதற்கு வழங்கப்பட்டு வரும் வாகன பாஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், ரேஷன் கடைகளிலும் ஆய்வுகளை செய்தனர்.
பின்னர் மத்திய குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜகந்நாதன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அப்போது சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் மேம்படுத்துவது குறித்தும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்த ஆலோசனைகளையும் மத்திய குழுவினர் வழங்கினர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பை முடித்த பின்னர், மத்திய குழுவினர் உணவுத்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது ஊரடங்கு உத்தரவு மேற்கொள்ளப்பட்டு வரும் காலத்தில் உணவு கையிருப்பு எந்த அளவுக்கு உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளிகளுக்கு எவ்வாறு உணவுகள் அளிக்கப்படுகிறது. உணவு தானியங்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது போன்ற ஆலோசனைகளை மேற்கொண்டதாக தெரிகிறது.
அதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேசை சந்தித்து சென்னையில் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
இந்த சந்திப்புகளின் போது, தாங்கள் கேட்டறிந்த விவரங்களை வைத்து வி.திருப்புகழ் தலைமையிலான மத்திய குழுவினர் ஒரு சில நாட்களில் அறிக்கை தயாரித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்குவார்கள் என்று தெரிகிறது.