சிவகாசி,
48 உறுப்பினர்களை கொண்ட சிவகாசி மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மாநகரட்சியை கைப்பற்றியது. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 24 பேர் வெற்றி பெற்றனர். தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் சார்பில் 6 பேரும், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த தலா ஒருவரும் வெற்றி பெற்றனர். இந்தநிலையில், அ.தி.மு.க.வில் இருந்து விலகி 9 கவுன்சிலர்கள் தி.மு.க.வில் சேர்ந்தனர். மேலும் சுயேச்சை கவுன்சிலர்கள் 4 பேரும் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் சிவகாசி மாநகராட்சியில் தி.மு.க.வின் பலம் 45 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் 45 பேரும் நேற்று சிவகாசி மாநகராட்சி கூட்ட அரங்கில் பதவி ஏற்றுக்கொண்டனர். நாளை (வெள்ளிக்கிழமை) மேயர், துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், பதவி ஏற்ற கையோடு தி.மு.க. அணியை சேர்ந்த 45 கவுன்சிலர்களும் அவர்களது குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா புறப்பட்டு சென்றனர். இதற்காக 2 சிறப்பு பஸ்களை அமர்த்தி இருந்தனர்.
நாளை காலை வரை கன்னியாக்குமரியில் இருக்கும் அவர்கள் பின்னர் அங்கிருந்து புறப்படுகிறார்கள். தி.மு.க. தலைமை யாரை மேயர் மற்றும் துணை மேயராக அறிவிக்க இருக்கிறதோ அவர்களை ஆதரித்து நாளை ஓட்டளிப்போம் என அவர்கள் தெரிவித்தனர்.