தமிழக செய்திகள்

எடப்பாடிக்கு எதிராக கொங்கு மண்டல அ.தி.மு.க.13 எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொங்கு மண்டல அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் ஆலோசனை நடத்தி உள்ளனர்.


சென்னை

முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.இது ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை விட கூடுதலாக 5 எம்.எல்.ஏ.க்களையே கொண்டதாக இருக்கிறது.

122 அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களில் பெரும்பாலான வர்கள் தங்களுக்கு பிடித்த மானவர்களுக்கு ஆதரவா ளர்களாக உள்ளனர். சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர் களுக்கும் கூட சில எம்.எல். ஏ.க்கள் அனுதாபிகளாக இருக்கிறார்கள்.இந்த நிலையில் இத்தகைய எம்.எல்-.ஏ.க்கள் திடீர், திடீரென ஆலோசனை நடத்தத் தொடங்கியுள்ளனர். கடந்த வாரம் அ.தி.மு.க.வில் உள்ள எஸ்.சி.,எஸ்.டி. எம்.எல்.ஏ.க்கள் திடீரென ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஒன்றாக இணையும் போது அமைச்சரவையில் தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க செய்ய அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.

அ.தி.மு.க. வட்டாரத்தில் எஸ்.சி.,எஸ்.டி. எம்.எல்.ஏ.க் களின் ஆலோசனை கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் ஒன்று கூடி திடீர் ஆலோசனை நடத்தி இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் ஆச்சரிய அலைகளை உருவாக்கி இருக்கிறது.

பெருந்துறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 6 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட மொத்தம் 13 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக தெரிய வந்துள்ளது.

அன்றைய தினம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஸ்ரீவாசவி கல்லூரி விழா நடந்தது. அந்த விழாவில் தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவர்கள் முதல்வர் கலந்து கொண்ட விழாவை புறக்கணித்து விட்டு, ரகசிய ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

அந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொங்கு மண்டல அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்தனர்.

ரகசிய கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு, தங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டு கொள்ளவில்லை என்ற அதிருப்தியும் ஆதங்கமும் உள்ளது. இதுபற்றி அவர்கள் கூட்டத்தில் தங்கள் கவலையை வெளியிட்டனர்.

ஒரு எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்-அமைச்சருடன் கலந்து பேசக் கூட இயலவில்லை. இதனால் தங்கள் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப் படாமல் உள்ளது என்றார்.

மற்றொரு எம்.எல்.ஏ. கூறுகையில், நாங்கள் சந்திக்க வேண்டும் என்று மனு கொடுத்தால், ஓரிரு நாட்களில் அனுமதி தந்து விடுவார். தற்போது அப்படி இல்லை என்றார்.

ரகசிய கூட்டத்துக்கு தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறியாவது:-

நாங்கள் எதிர்ப்பு கூட்டம் நடத்தவில்லை. ஒருமித்த கருத்துடைய எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி பேசினோம். எங்கள் தொகுதி மக்களின் நலனை பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அதுபற்றியே நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.

அம்மா என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இதன் காரணமாகவே அவர் கடந்த சட்டசபை தேர்தலின் போது, பெருந்துறையில் சுமார் 3 லட்சம் பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அத்தகைய நிலையில் இருந்த என்னை, கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல் செய்யும் முயற்சி நடக்கிறது. அந்த சதி திட்டம் தெளிவாகி விட்டது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறினார்.

அ.தி.மு.க.வில் தனக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் என்பதற்காகவே தோப்பு வெங்கடாசலம், கடந்த சில தினங்களாக பரபரப்புகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. தன்னை ஓரம் கட்ட இயலாது என்பதை நிரூபிக்கவே அவர் பெருந்துறையில் 6 எம்.எல்.ஏ.க்களை அழைத்து கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.அவரை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சமரசம் செய்து வருகிறார்கள்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு