முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 6 டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது.
இதன்படி நேற்று காலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 8 ஆயிரத்து 988 தேங்காய்களை (3840 கிலோ) ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதனை தொடர்ந்து டெண்டர் முறையில் ஏலம் நடைபெற்றது. இதில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.24.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.15-க்கும், சராசரி விலையாக ரூ.24.15-க்கும் ஏலம் விடப்பட்டது.
தேங்காய் பருப்பு ஏலம்
மேலும் 69 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.84.15-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.56-க்கும், சராசரி விலையாக ரூ.80.15-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.
மேலும் 8 மூட்டைகள் சிவப்பு ரக எள் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.110.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.81.10-க்கும், சராசரி விலையாக ரூ.110.20-க்கும் ஏலம் விடப்பட்டது.
மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 5 ஆயிரத்து 284 தேங்காய்களும், 12 தேங்காய் பருப்பு மூட்டைகளும் குறைவாக கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் தேங்காய் ஒரு கிலோவிற்கு 20 பைசாவும், தேங்காய் பருப்பு ஒரு கிலோவிற்கு ரூ.2.45- ம் கூடுதலாகவே விவசாயிகளுக்கு கிடைத்தது. மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கடந்த வாரம் எள் வரத்து இல்லாததால் ஏலம் நடைபெறவில்லை. ஆனால் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ சிவப்பு ரக எள் ரூ.110- ஐ தாண்டி உள்ளது. மேலும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தேங்காய் பருப்பு விலை கிலோ ரூ.90-ஐ தாண்டி ஏலம் விடப்பட்டு வந்த நிலையில் தற்போது வரை ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
6 டன் ஏலம்
மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் மூட்டைகள் 6 டன் அளவில் மொத்தம் ரூ.2 லட்சத்து 89 ஆயிரத்து 689-க்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் விடப்பட்டது.
இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.