சென்னை,
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பு இருவரும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இன்று நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில், அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். விழா மேடையில் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அமர்வதற்காக 94 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக இந்தப் பொதுக்கூட்டம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியை தொடரவும், புரட்சித் தலைவி ஜெயலலிதா உருவாக்கிய அமைதி, வளம், வளர்ச்சி என்னும் தாரக மந்திரத்தின்படி நடைபெறும் நல்லாட்சியை மீண்டும் மலரச் செய்திடும் வகையிலும், இன்று காலை 10 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், அதிமுக தேர்தல் பணிகளை தொடக்கி வைக்கும் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் களத்தில் அதிமுக நிகழ்த்த இருக்கும் போர் முழக்கமாக இந்த பிரசார கூட்டம் இருக்கும் என்றும், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்களை நெஞ்சில் சுமந்து பணியாற்றி வரும் அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தனர்.