தமிழக செய்திகள்

“அதிமுக பொதுச்செயலாளர்: சசிகலாவுக்கு உரிமை இல்லை” - ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் வாதம்

அதிமுகவின் பொதுச்செயலாளராக உரிமை கோருவதற்கு சசிகலாவுக்கு உரிமை இல்லை என ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 6 தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதன் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகளாக சசிகலாவையும், தினகரனையும் தேர்ந்தெடுத்தது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனவும் தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

இந்த வழக்கின் மதிப்பு அடிப்படையில், இந்த வழக்கானது சென்னை ஐகோர்ட்டில் இருந்து சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற போது, அமமுக என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக டி.டி.வி. தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் சசிகலா தொடர்ந்த இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணப்பாளர் பழனிசாமி மற்றும் அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அத்தனை வழக்குகளும் சென்னை 4-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணன், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் ராஜகோபாலன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்கள் வாதத்தில், இந்த வழக்கை தொடர்வதற்கு சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், ஏற்கனவே கட்சி உரிமை கோரிய வழக்கில் மதுசூதனன் தலைமையிலான அணியே அதிமுக என அறிவித்து தேர்தல் ஆணையமும் டெல்லி ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

அதே போல அதிமுகவின் பொதுச்செயலாளராக உரிமை கோருவதற்கு சசிகலாவிற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்றும் கட்சியும் சின்னமும் தங்களிடம் தான் இருப்பதாகவும், தேர்தல் ஆணையமும் அதனை உறுதி செய்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் சசிகலா தொடர்ந்த இந்த வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் இதை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதம் இன்று முடிவடையாத காரணத்தால், இந்த வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 27 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு