தமிழக செய்திகள்

சட்டசபையில் எதிரொலித்த அதிமுக பிளவு... எடப்பாடி - எஸ்.பி.வேலுமணி தனித்தனியாக பேசினர்

அதிமுகவை உடைக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம் இல்லை என்று எஸ்.பி.வேலுமணி கூறினார்.

சென்னை,

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நிகழ்வாக, சட்டசபையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் யாரும் போட்டியிடாததால் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகரனும், துணை சபநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை மரபுபடி அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இரு கைகளை பிடித்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் முதல்-அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட சட்டமன்ற கட்சித் தலைவர்கள், ஜே.சி.டி. பிரபாகரை வாழ்த்திப் பேசினர்.

அப்போது அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமிக்கு பேச சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாய்ப்பளித்தார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை வாழ்த்தி அவையை நடுநிலையாக நடத்தி செல்ல வேண்டும் எனவும் எந்தளவுக்கு எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பளிக்கிறீர்களோ, அந்தளவுக்கு இந்த ஆட்சி சிறப்பாக நடக்கும் என்றும் கேட்டுக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அமர்ந்தார்.

பின்னர் எஸ்.பி.வேலுமணி தான் பேச வாய்ப்பளிக்குமாறு கையை உயர்த்தினார். இதனை கவனித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், எஸ்.பி.வேலுமணிக்கும் பேச வாய்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து எழுந்து பேசிய வேலுமணி, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். பிற கட்சிகள் சார்பில் தலா ஒருவர் மட்டுமே பேசிய நிலையில், அதிமுக சார்பில் 2 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவை உடைக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம் இல்லை என்றும் அதிமுக உடைய நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம் எனவும் எடப்பாடி பழனிசாமி இறங்கி வர வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.