சென்னை,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்து பிரதிகளை தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கட்சி நிர்வாகிகளுடன் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நேற்று வழங்கினார்.
அதைத் தொடர்ந்து தமிழக பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்தில் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:
தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. தேசிய கல்வி கொள்கை எந்த அளவிற்கு மாணவர்களுக்கு பயன் உள்ளது. நமது மாணவர்களை சர்வதேச தரத்திற்கு எப்படி உயர்த்தக்கூடியது என்பதை எடுத்துக்கூறி சுமார் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
இதேபோன்று, துணை வேந்தர்கள், ஓய்வு பெற்ற துணை வேந்தர்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் என கல்வியாளர்கள் மத்தியில் தேசிய கல்வி கொள்கை ஆதரவு கூட்டம் நடத்தப்பட்டு 2 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கப்பட்டு உள்ளது. இவற்றை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஒப்படைத்தோம்.
பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை நிறுத்துவதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் 4 கோடி பட்டியல் இன மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்காக மத்திய அரசாங்கம் 59 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.கபா.ஜனதா கூட்டணி தொடர்கிறதா? என்ற நிருபர்கள் கேட்டதற்கு, அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி நீடித்துக்கொண்டு இருக்கிறது. வலிமையான கூட்டணியாக இருக்கிறது என்று பதில் அளித்தார்.