தமிழக செய்திகள்

சென்னையில் தொடங்கியது அகில இந்திய ‘எண்டாஸ்கோப்பி’ மாநாடு 300-க்கும் மேற்பட்ட பெண் டாக்டர்கள் பங்கேற்பு

300-க்கும் மேற்பட்ட பெண் டாக்டர்கள் பங்கேற்ற அகில இந்திய ‘எண்டாஸ்கோப்பி’ மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது.

சென்னை,

ஐயேஜ், ஆக்ஸி மற்றும் ஏ.டி.என்.ஆர்.சி.ஓ.ஜி. ஆகிய அமைப்புகளின் சார்பில் ஈவி எண்டாஸ்கோப்பி 2019 என்ற தலைப்பில் அகில இந்திய எண்டாஸ்கோப்பி மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள ஹில்டன் ஓட்டலில் மாலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநாட்டின் அமைப்புக்குழு தலைவர் டாக்டர் ரேகா குரியன் வரவேற்புரையாற்றினார். சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் சாவித்திரி சுப்பிரமணியம், லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் (லண்டன்) டாக்டர் ஏடியோலா ஓலய்டன் ஆகியோர் குத்து விளக்கேற்றினார்கள்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:- தமிழகத்தில் லேப்ராஸ்கோப்பி, எண்டாஸ்கோப்பி பிரிவுகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. நான் பொறுப்பு வகித்து வரும் இந்த காலக்கட்டத்தில் மருத்துவத்துறையில் நிறைய இளைஞர்களை பார்த்திருக்கிறேன். இந்த கருத்தரங்கு அறிவாற்றலை பகிர்ந்து கொள்ள உதவி கரமாக இருக்கும். தமிழக அரசு குழந்தைகள் சுகாதாரத்தில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் நடந்த சுமார் 2,800 பிரசவத்தில், 2 ஆயிரம் பிரசவங்கள் அரசு ஆஸ்பத்திரியில் நிகழ்ந்துள்ளன. அனைத்து நோயாளிகளையும் நாங்கள் கடவுளாக கருதுகிறோம்.

டாக்டர்கள் நோயை குணப்படுத்தி விடுவார்கள் என்று நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படுகிறது. இன்னும் பல ஆராய்ச்சிகள் செய்து, தீர்வு காணவேண்டும் என்பது சுகாதாரத்துறைக்கு உள்ள சவாலாக இருக்கிறது. அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைக்கவேண்டும். இதை உறுதி செய்யவேண்டும் என்பதுதான் நோக்கம்.

இன்சூரன்சுக்கு அதிகமாக விண்ணப்பித்து சிகிச்சை பெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. சிறப்பான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக அரசும், தனியார் துறையும் இணைந்து செயல்படவேண்டும். சுகாதார சேவையில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. வரும் முன் காப்பதே சிறந்தது. அதற்கு முந்தைய சுகாதாரத்துக்கு செல்லவேண்டும். அதற்காக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். டெங்கு காய்ச்சலால் இறப்பு நிகழ்வதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எதற்காக அந்த காய்ச்சல் வருகிறது? என்று யாரும் சொல்வது இல்லை. பெண்கள், குழந்தைகளுக்கு எளிதாகவும், தரமாகவும் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். சுகாதாரத்துறையில் உள்ள நிபுணர்களை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மாநாட்டின் அமைப்பு செயலாளர் டாக்டர் சுமனா மனோகர் நன்றி கூறினார்.

இதில் ஐயேஜ் அமைப்பின் தலைவர் டாக்டர் ரிஷ்மா திலான்பாய், செயலாளர் டாக்டர் கிருஷ்ண குமார், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ கஜராஜ் ஆகியோர் உள்பட 300-க்கும் மேற்பட்ட பெண் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று காலையில் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் எண்டாஸ்கோப்பி வைத்து அறுவை சிகிச்சை செய்வது எப்படி? என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது.

மாநாட்டின் நிறைவு நாளான இன்று எண்டாஸ்கோப்பி, லேப்ராஸ்கோப்பி ஆகியவை தொடர்பான சந்தேகங்களை விவாதிக்கவும், அதுதொடர்பான தகவல்களை நிபுணர்கள் விளக்கவும் செய்கின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு