தமிழக செய்திகள்

நாடு முழுவதும் வருகிற 8-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - பொதுத்துறை ஊழியர்கள் ஆதரவு

மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து வங்கி ஊழியர்கள் 8-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டத்துக்கு பொதுத்துறை ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

சென்னை,

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கவோ, பிற வங்கிகளோடு இணைக்கவோ கூடாது. வராக்கடன்களை வசூலிக்கவேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். தொழிலாளர் விதிகளில் பாதிப்பு ஏற்படும் வகையில் திருத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து வருகிற ஜனவரி 8-ந்தேதி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட 5 வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து இதற்கான அழைப்பு விடுத்துள்ளன.

மத்திய அரசு தொழிற்சங்கங்களான ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் போராட்டத்தில் குதிக்கின்றன.

ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கிகள், ரெயில்வே தேர்வு வாரியம், எல்.ஐ.சி. (ஆயுள் காப்பீட்டு கழகம்) மற்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், இரும்பு ஆலை, எண்ணெய்-நிலக்கரி நிறுவனங்கள், ரெயில்வே, துறைமுகம், சாலை போக்குவரத்து துறைகளை சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 25 கோடிக்கும் மேலானவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள்.

அரசு சமீபத்தில் 6 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை 4 வங்கிகளோடு இணைத்தது. இது மோசமான முடிவு. இது வாடிக்கையாளர் சேவை, வேலைவாய்ப்பை கடுமையாக பாதித்துள்ளது. மேலும் இந்த முடிவு வராக்கடன்களை வசூலிப்பதற்கு எந்த வகையிலும், உதவிக்கரமாக இல்லை. ஆனால் மறுபக்கத்தில் அனைத்து வகையான சேவைகளுக்கும் கட்டணம் மற்றும் அபராதங்கள் சாதாரண மக்களுக்கு விதிக்கப்படுகின்றன.

சாதாரண மக்களின் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரிய நிறுவனங்களின் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு ஒளியையும், சாதாரண மக்களுக்கு வலியையும் கொடுக்கிறது. சாதாரண மக்கள் மீது ஏற்றப்படும் சுமையை நாங்கள் கண்டிக்கிறோம். எனவே எங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...