சென்னை,
தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு இருப்பதோடு பல தளர்வுகளும் அனுமதிக்கப்பட்டு உள்ளன. அதற்கேற்ற வகையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தளர்வுகளை திருத்தி அமைத்து புதிய உத்தரவை வெளியிட வேண்டும் என்று அரசை வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக்கொண்டார். எனவே வழிகாட்டி நெறிமுறைகளை திருத்தி புதிய தளர்வுகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கட்டுமானத் தொழில் ஆகியவற்றுக்கு தங்களின் பணியாளர்களை அழைத்து வரும் வாகனங்களில், அதன் இருக்கை எண்ணிக்கையில் 60 சதவீதம் பேரை மட்டுமே ஏற்ற வேண்டும். அங்குள்ள பணியிடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம். தொழிற்சாலை, நிறுவனங்களுக்கு ஜீப், கார் போன்ற வாகனங்களில் டிரைவர் தவிர 3 பேர் வரலாம்.
கடைகள், உணவகங்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற இடங்களில் 24 முதல் 30 டிகிரி வரை ஏசி வசதியை வைத்துக்கொள்ளலாம். அங்குள்ள ஈரப்பதம் 40 முதல் 70 சதவீதம் இருக்க வேண்டும். 50 சதவீத வெளிக்காற்று வரும்படி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.