தமிழக செய்திகள்

அம்மா மினி கிளினிக் திட்டத்தை முழுமையாக மீண்டும் தொடங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அம்மா மினி கிளினிக் திட்டத்தை முழுமையாக மீண்டும் தொடங்க வேண்டும் என தமிழக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பூலாம்பாடி காலனி கிராமத்தில் தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற லட்சிதா என்ற 5 வயது பெண் குழந்தை உயிரிழந்துவிட்டது. விசாரணையில் சிகிச்சை அளித்த டாக்டர் சத்தியசீலன் ஒரு போலி டாக்டர் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடிவருகிறார்கள். அந்த கிளினிக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

பணம் செலவு செய்து சிகிச்சை

காய்ச்சல், சளி, இருமல் போன்ற சாதாரண நோய்கள் வந்தால் அருகில் உள்ள தனியார் டாக்டர்களிடம் சென்று, பணம் செலவு செய்து சிகிச்சை பெறமுடியாத ஏழை-எளிய, நடுத்தர மக்கள், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், முதற்கட்டமாக 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை தமிழகமெங்கும் அ.தி.மு.க. அரசு தொடங்கியது.

இல்லம் தேடி மருத்துவம்

ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் இந்த அரசு, அம்மா மினி கிளினிக் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தியது. இதனால் ஏழை மக்கள் மீண்டும் தனியார் டாக்டர்களிடம் சிகிச்சைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிறுமி லட்சிதா போல இன்னும் எத்தனை பேர் சிகிச்சைக்கு பணம் இல்லாத சூழ்நிலையில், குறைவான கட்டணத்தில் இது போன்ற போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று உடல் நலத்தை மேலும் கெடுத்துக் கொள்கிறார்களோ, உயிரை இழக்கும் சூழ்நிலைக்கு உள்ளாகிறார்களோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது.

இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை இந்த விடியா அரசு அறிவித்தது. என்ன ஆனது இந்த திட்டம், இந்த திட்டத்தின்படி பூலாம்பட்டி காலனி கிராமத்துக்கு இந்த குழு சென்றிருந்தால், அந்தக் குழந்தை உயிர் பிழைத்திருக்கும்.

நிதியுதவி வழங்க வேண்டும்

எனவே, தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் என்று வீம்பு பிடிக்காமல், அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த அம்மா மினி கிளினிக் திட்டத்தை முழுமையாக மீண்டும் தொடங்க வேண்டும். உயிரிழந்த பெண் குழந்தை லட்சிதாவின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை