தமிழக செய்திகள்

மதுரவாயல் அருகே குடும்ப தகராறில் முதியவர் அடித்துக்கொலை

குடும்ப தகராறில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

குடும்ப தகராறு

மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், கோவிந்தப்பன் நாயக்கர் முதல் தெருவைச் சேர்ந்தவர் அங்கப்பன் (வயது 65). இவர் தன்னுடைய மனைவி, மகள், மருமகனுடன் ஒன்றாக வசித்து வந்தார். இவரது வீட்டின் அருகிலேயே அங்கப்பனின் சகோதரர்கள் முருகேசன், முனுசாமி ஆகியோரும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் அங்கப்பன் குடும்பத்துக்கும், அவருடைய அண்ணன் முருகேசன் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

முதியவர் அடித்துக்கொலை

நேற்று முன்தினம் அங்கப்பனின் மகள் விஜயலட்சுமி தண்ணீர் பிடிக்க வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அவருக்கும், முருகேசனின் மருமகள் வனிதா (35)வுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அங்கப்பன் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த வனிதா, அவருடைய கணவர் ரவிக்குமார் (40) மற்றும் வனிதாவின் சகோதரி கவிதா (37), அவருடைய கணவர் விக்னேஷ் (35) ஆகிய 4 பேரும் சேர்ந்து அங்கப்பனை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அங்கப்பன், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

4 பேர் கைது

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், அங்கப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி இன்ஸ்பெக்டர் சிவானந்த் கொலை வழக்குப்பதிவு செய்து ரவிக்குமார், வனிதா, விக்னேஷ், கவிதா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

அங்கப்பன் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் இடையே மோட்டார் சைக்கிள் நிறுத்துவது உள்பட சிறு சிறு பிரச்சினைகள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தற்போது தண்ணீர் பிடிக்க சென்றபோது பெண்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறு கொலையில் முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது