தமிழக செய்திகள்

ஆந்திரா: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 20 பேர் பலி - செல்வப்பெருந்தகை இரங்கல்

போதிய விழிப்புணர்வு இல்லாததும் இத்தகைய கோர விபத்துகள் ஏற்பட காரணம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

ஆந்திரா மாநிலம், காகிநாடா அருகில் உள்ள வேட்டப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சூரிய ஸ்ரீ என்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 20 நபர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். பலர் படுகாயம் அடைந்துள்ள செய்தியும் வந்து கொண்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.

பட்டாசு ஆலைகள், கிடங்குகளிலும் அடிக்கடி வெடி விபத்துக்கள் நடைபெறுவதும், அதில் தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர் கதையாகியுள்ளது. இவ்வாறான வெடி விபத்துகள் உடனடியாக தடுக்கப்படவேண்டும்.

பட்டாசு ஆலைகளிலும், அவை பாதுகாத்து வைக்கப்படும் கிடங்குகளிலும் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாதது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லாத மாநிலமாக உருவாக்கிட ஆந்திரா அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், தொழிலாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததும் இத்தகைய கோர விபத்துகள் ஏற்பட காரணமாகிறது.

தமிழ்நாட்டில் கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்பே, வெயில் வாட்டி வதைக்கிறது. எனவே, எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசு ஆலை, பெட்ரோல், டீசல் பங்குகள், கேஸ் பங்குகள் ஆகியவை பாதுகாப்பாகவும் முறையாக இயங்குகிறதா எனவும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.