கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் ஆத்திரம்: கணவரை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி - அதிர்ச்சி சம்பவம்

கணவரை குத்திக்கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை அண்ணாநகர் கிழக்கு ஓ பிளாக் 29-வது தெருவில் உள்ள மழைநீர் கால்வாயில் ரத்தக்கறை படிந்த நிலையில் சாக்குமூட்டை ஒன்று கிடந்தது. யாரையோ கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசி இருப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கால்வாயில் கிடந்த சாக்குமூட்டையை மீட்டு பிரித்து பார்த்தனர். அதில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

விசாரணையில் நள்ளிரவில் பெண் ஒருவர், அந்த சாக்குமூட்டையை இழுத்துச்சென்று கால்வாயில் வீசிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சாக்குமூட்டையை கால்வாயில் வீசியது அண்ணாநகர் கிழக்கு அன்னை சத்யா நகர் 7-வது தெருவை சேர்ந்த அம்பிகா (57 வயது) என்பது தெரியவந்தது. சந்தேகத்தின்பேரில் அம்பிகாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது கால்வாயில் பிணமாக கிடந்தவர் அம்பிகாவின் கணவர் சந்தானம் (60 வயது) என்பதும், அவரை, அம்பிகாவே கத்தியால் குத்திக்கொலை செய்து, உடலை கால்வாயில் வீசியதும் தெரிய வந்தது. அம்பிகா, தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். அவரது கணவர் சந்தானம், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். அவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பும் வழக்கம்போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சந்தானம், மனைவியுடன் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அம்பிகா, வீட்டில் இருந்த கத்தியால் கணவரை குத்திக்கொலை செய்துள்ளார். பின்னர் உடலை என்ன செய்வது? என்று தெரியாமல் வீட்டிலேயே 2 நாட்கள் வைத்திருந்தார்.

அதன் பிறகு கணவரின் உடலை சாக்குமூட்டையில் கட்டி நள்ளிரவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இழுத்துச் சென்று வீட்டின் அருகே உள்ள மழைநீர் கால்வாயில் வீசி விட்டு வந்தது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அம்பிகாவை போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT