சென்னை,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, கடந்த 23ம் தேதி மதுராந்தகத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிலையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் தொடர் சுற்றுப்பயணம் செய்வதற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அதில் இரண்டு முதல் ஏழு சட்டசபை தொகுதிகள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பாஜகவின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எல்.முருகன்
திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம் ஆகிய 5 தொகுதிகளுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் சுற்றுப்பயணம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல், வானதி சீனிவாசனுக்கு திருப்பூர் தெற்கு, குன்னூர், கோயம்புத்தூர் தெற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழிசை சவுந்திரராஜனுக்கு கும்மிடிபூண்டி, மயிலாப்பூர், நாங்குநேரி, பொள்ளாச்சி, கிளீயூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதுகுளத்தூர், விளவன்கோடு, திருப்பத்தூர் சிவகங்கை, உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகளுக்கு எச்.ராஜா சுற்றுப்பயணம் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விபி துரைசாமிக்கு எழும்பூர், ராசிபுரம், பரமத்திவேலூரும், பொன் ராதாகிருஷ்ணனுக்கு தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளையம், பழனி ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.