சென்னை,
பா.ஜனதாவில் இருந்து விலகி, ‘வி த லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கிய அண்ணாமலை, 2027-ம் ஆண்டில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2029 நாடளுமன்ற தேர்தலை குறிவைத்து, தனது கட்சியின் பலத்தை நிரூபிக்க அவர் இப்போதே வியூகம் வகுத்து வருகிறார்.
‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் மூலம் ‘போதையில்லா தமிழகம்’ என்ற முழக்கத்துடன், தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்களை அண்ணாமலை முன்னெடுத்துள்ளார். இதுமட்டுமின்றி, நீர்நிலைகள் தூர்வாருதல், கடற்கரை தூய்மை பணி போன்றவற்றிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கன்னியாகுமரி கடற்கரை தூய்மை பணி மற்றும் மதுரை வைகை ஆற்று தூய்மை பணியில் அவரே நேரடியாக களமிறங்கி செயல்பட்டார்.
அண்ணாமலையின் தலைமையில் இந்த அமைப்பில் இதுவரை 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இணையதளம் மூலம் ஓ.டி.பி. பெற்று உறுப்பினராகும் முறை உள்ளதால், சாதாரண மக்களுக்காக ‘மிஸ்டு கால்’ மூலம் இணையும் புதிய வசதியை அண்ணாமலை விரைவில் அறிவிக்கவுள்ளார்.
அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளாக, அமைப்பின் பொது செயலாளராக கரு.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற முக்கிய பதவிகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியில் அண்ணாமலை தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, வரும் 2027-ஆம் ஆண்டில் அண்ணாமலை முறைப்படி புதிய அரசியல் கட்சியை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. 2029 நாடளுமன்ற தேர்தலில் தனது கட்சியின் அரசியல் பலத்தை காட்டுவதே இதற்கு காரணம் என தெரிகிறது. அதேநேரம், விரைவில் வரவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து அண்ணாமலை இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.