தமிழக செய்திகள்

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலை: ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு

புதிய அரசியல் இயக்கத்தை அறிவித்த அண்ணாமலை டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார்.

அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வந்தன. அதற்கேற்ப கடந்த 1-ந்தேதி டெல்லி சென்ற அண்ணாமலை, கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து, பாஜகவில் இருந்து விலகுவதற்கான 5 பக்க கடிதத்தை வழங்கினார்.தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து பேசினர்.

தனிக்கட்சி

கடந்த 4 நாட்களாக டெல்லியில் தங்கிருந்த அண்ணாமலையிடம் சமாதானப்பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அண்ணாமலை அதில் தீவிரமாக இருந்ததால் வேறு வழியின்றி அவரது ராஜினாமா ஏற்கப்படுவதாக பாஜக தலைமை அறிவித்தது. இதையடுத்து, சமூக வலைத்தளம் வாயிலாக இன்று உரையாற்றிய அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டார். பொதுத்தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்றும் அண்ணாமலை அறிவித்தார்.

உற்சாக வரவேற்பு

தனது அரசியல் இயக்கத்தில் (வி த லீடர்ஸ்) சேருவதற்கான இணையதளத்தையும் அண்ணாமலை வெளியிட்டார். இந்த இணையதளத்தில் ஆர்வத்துடன் பலரும் தங்கள் பெயரை பதிவு செய்து வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனிடையே, டெல்லியில் இருந்து அண்ணாமலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். காரின் இருபக்கமும் சூழந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.