தமிழக செய்திகள்

7 தொகுதிகளில் நாளை பிரசாரம் மேற்கொள்ளும் அண்ணாமலை

பொதுமக்கள் பெருந்திரளாகக் கூடி, தங்கள் முழு ஆதரவையும் வழங்குமாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நாளை 7 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நாளைய தினம் காலை, (12.04.2026) காரைக்குடி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளிலும், மாலையில், திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு, மதுரை மத்தி, மானாமதுரை, மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.

ஊழல், போதைப் பொருள் புழக்கம், பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, திமுகவினர் அராஜகம் ஆகியவற்றால் தமிழகத்தைச் சீரழித்த கையாலாகாத திமுக ஆட்சிக்கு, தமிழக மக்கள் முடிவுரை எழுதப் போகும் தேர்தல் இது.

எனவே, பொதுமக்கள் பெருந்திரளாகக் கூடி, தங்கள் முழு ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.