திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு பகுதியில் 3 பள்ளிச் சிறுமிகளை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த வடிவேலு-பவானி தம்பதியினரின் 2-வது மகள் ஹேமலதா என்கிற ஹேமாவதி (வயது 7). இவள் கடந்த 11-ந் தேதி தன்னுடைய பிறந்த நாள் விழாவை கொண்டாடி விட்டு பெற்றோருடன் படுத்து தூங்கினாள். மறுநாள் அதிகாலை 5.30 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது ஹேமலதாவை காணவில்லை. பல்வேறு இடங்களில் பெற்றோர், உறவினர்கள் தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிறுமியின் தாய் பவானி கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமியை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும் சிறுமியை பற்றிய எந்தவொரு தடயமும் சிக்காததால் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிறுமி காணாமல் போய் இன்றுடன் 16 நாட்கள் ஆகும் நிலையில் அவளை பற்றிய எந்தவொரு துப்பும் துலங்காததால் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து, நேற்றும் 5-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். சிறுமியின் தாய், தந்தை, பாட்டி மற்றும் உறவினர்களிடம் தனித்தனியாக துருவி, துருவி விசாரணை நடத்தினர். செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில், தற்போது ஆர்காம்பூண்டி எனும் பகுதியில் வீட்டில் பதிவான சிசிடிவி காட்சிகளை சிபிசிஐடி ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு பகுதியில் 3 பள்ளிச் சிறுமிகளை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் கேரளாவில் கூலி வேலை செய்து வரும் நிலையில், நேற்று பள்ளி சென்ற 2 சகோதரிகள் மற்று 1 உறவுக்கார சிறுமி என 3 மாணவிகள் (8,9,10 ஆம் வகுப்பு ) இன்னும் வீடு திரும்பவில்லை என தண்டராம்பட்டு காவல்நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.