சென்னை,
சர்க்கரை நோய், உடல் பருமன், தூக்கமின்மை, புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்களை ஆரம்பத்தில் இருந்தே கண்காணித்து சிகிச்சை அளிக்கவும், தொழில்நுட்ப மருத்துவ பரிசோதனைகள் செய்யவும், ஆரோக்கிய வாழ்வுக்கான அப்பல்லோ புரோஹெல்த் என்ற திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் நடந்த விழாவில் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பரிசோதனைகள் செய்யவேண்டும்
அந்த விழாவில் டாக்டர் பிரதாப் ரெட்டி பேசியதாவது:-
நோய் வந்தால் எப்படி குணப்படுத்துவது என்று தான் பலரும் சிந்திக்கிறார்கள். ஆனால் நோய்களே வராமல் ஆரோக்கியமாக இருப்பது எப்படி? என்பது குறித்து யாரும் யோசனை செய்வது கூட இல்லை. நம்முடைய ஆரோக்கியத்தை கவனித்துக்கொண்டால், எதையும், எப்போதும் குணப்படுத்த தேவை இல்லை.
இதுதொடர்பான விழிப்புணர்வு, மருத்துவ வசதிகள் இருந்தாலும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் முழு உடல் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். இளம் வயதினரும் இந்த பரிசோதனைகளை செய்யவேண்டும்.
தொழில்நுட்ப சாப்ட்வேர்
புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளிட்ட மக்களை அதிகம் பாதிக்கும் தொற்றாத நோய்கள் சுனாமி போன்று உலகத்தையே அச்சுறுத்தி வருகின்றன. இந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை மாற்றி, புதிய முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதுதான் அப்பல்லோ புரோஹெல்த் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இது நல்ல முறையில் பயன் தரக்கூடிய ஒரு உடல்நல சுகாதார மேலாண்மை திட்டம் ஆகும். இந்த திட்டத்தில், எந்த பரிசோதனைகளை செய்யவேண்டும்? என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடவேண்டும்?, என்னென்ன வாழ்க்கை முறை மாற்றங்களை கடைபிடிக்கவேண்டும்? போன்ற விவரங்களை பெறுவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்துகொண்டோர்
விழாவில் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் பிரீதா ரெட்டி, நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டி, தடுப்பு மருந்துகள் இயக்குனர் உதயா, அப்பல்லோ அறக்கட்டளையின் துணைத் தலைவர் எம்.எஸ்.உபாசனா கெமினேனி, இந்தியன் வங்கியின் தலைவர் பத்மஜா சுந்துரு மற்றும் டாக்டர்கள் பங்கேற்றனர்.