தமிழக செய்திகள்

“ஓ.பன்னீர்செல்வத்திடம் சிகிச்சை தொடர்பான கேள்விகளை கேட்கக்கூடாது” - அப்போலோ தரப்பு எதிர்ப்பு

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்விகள் கேட்கக்கூடாது என அப்போலோ தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், 90 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு நேற்று விசாரணைக்கு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அவரிடம் 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 78 கேள்விகள் கேட்கப்பட்டன.

அதனை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஆணையத்தில் விசாரணைக்காக ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகியுள்ளார். ஆணையத்தின் விசாரணையை தொடர்ந்து சசிகலா, அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆணையத்தின் விசாரணையின் போது, ஜெயலலிதாவுக்கு இதயத்தில் இருந்த பிரச்சினை தொடர்பாக பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அப்போலோ தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்விகள் கேட்கக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

சிகிச்சை தொடர்பாக எந்த தகவலும் தனக்கு தெரியாது என நேற்று ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், மருத்துவம் தொடர்பான கேள்விகளை மருத்துவத்துறை சாராத ஒருவரிடம் எவ்வாறு கேட்க முடியும் என்று அப்போலோ தரப்பு கூறியது. மேலும் மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்கும் போது முந்தைய சாட்சிகள் கூறியதை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று அப்போலோ தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனையடுத்து விசாரணை ஆணையம் தரப்பு வழக்கறிஞர், ஜெயலலிதாவுக்கு இருந்த வியாதி, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை, மருந்துகள் ஆகியவை தொடர்பாக தான் கேள்விகள் கேட்கக்கூடாது, வியாதி இருந்தது உங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து கேள்வி எழுப்பலாம் என்று வாதிட்டார்.

இதனால் ஆணையத்தின் விசாரணையின் போது சிறிது நேரம் இருதரப்புக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது. பின்னர் மீண்டும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்