சென்னை,
பாரம்பரிய ஆணையத்தின் தலைவரை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாட்டிலுள்ள தொன்மையான, பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாத்து புனரமைப்பதற்காக தேவையான அறிவுரைகளை வழங்கிட, அரசால் அமைக்கப்படவுள்ள பாரம்பரிய ஆணையத்தின் (Heritage Commission) தலைவரை நியமனம் செய்திட, பாரம்பரியமிக்க கலாச்சாரங்களை பேணுவதில் அக்கறைக் கொண்டவராகவும் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுபவராகவும் உள்ள நபர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் கோரி, 04.02.2026 அன்று, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட அறிவிப்பின்படி, தகுதி உள்ள நபர்கள், தங்களைப் பற்றிய விவரங்களை தெரிவிக்கும் சுய விவர விண்ணப்ப படிவத்துடன் (self-format application), வயது, தகுதி, அனுபவம் மற்றும் இதர விவரங்களுக்கான ஆவணங்களுடன், 18.02.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை தலைமைச் செயலகம், சென்னை-9 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் அல்லது மின்னஞ்சல் (toursec@tn.gov.in) வழியாக விண்ணப்பங்களை அனுப்பலாம்.
மேலும், விவரங்களை இந்துசமய அறநிலையத்துறையின் வலைதளம் (www.hrce.tn.gov.in) மற்றும் தொல்லியல் துறையின் வலைதளம் (www.tnarch.gov.in) ஆகியவற்றில் அறிந்து கொள்ளலாம்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.