தமிழக செய்திகள்

மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மத்திய அரசின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் முனைவோராக்கிடவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மாவட்ட தொழில் மையம் மூலமாகவும், ஊரக பகுதிகளில் கதர்கிராமத் தொழில்கள் ஆணையம் கதர் கிராமத்தொழில்கள் வாரியம் மூலமாகவும், கயிறு சார்ந்த தொழில்களுக்கு கயிறு வாரியம் மூலமாகவும் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் குறுந்தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டு அதன்மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

114 பேர் தேர்வு

இத்திட்டத்தின்கீழ், மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டிற்கு 114 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். திட்ட முதலீட்டில் விளிம்புத்தொகையாக பொதுப்பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும். அதிகபட்ச திட்ட மதிப்பீடு உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.50 லட்சமும், சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் வங்கிகள் லம் தொழில் கடன் பெறலாம்.

இவற்றில் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கதர்கிராமத் தொழில்கள் ஆணையம் மூலமாக சான்றிடப்பட்ட கதர் கிராமத்தொழில்கள் நிறுவன விற்பனை நிலையத்திற்கு மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை நிலையத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.

மோட்டார் படகு

சேவை சார்ந்த தொழில்களுக்கு போக்குவரத்து, வாகனம், மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள், பால் பொருட்கள், மீன் வளர்த்தல், பட்டுப்பூச்சி, தேனீ, கோழி வளர்த்தல், மோட்டார் படகு ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்ட இனங்களாகும்.

வியாபாரம் மற்றும் போக்குவரத்து வாகனத்தை பொறுத்தவரையில் மொத்த இலக்கீட்டு தொகையில் 10 சதவீதம் மட்டுமே வழங்கப்படும். எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் www.kviconline.gov.in/pmegp என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அலுவலகத்தை 04364-212295 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.