தமிழக செய்திகள்

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்புசங்கங்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு தமிழக அரசால் வழங்கப்படும் 2022-2023-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருது வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணிமேகலை விருது பெறுவதற்கான தகுதியுள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புசங்கம், வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகள், முறையான கூட்டம் நடத்தல், சேமிப்பு செய்ததை முறையாக பயன்படுத்தல், வங்கிகடன் பெற்று இருத்தல், குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைதல், உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சி பெற்றிருத்தல், சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் மதிப்பீட்டு காரணிகள் குறித்த விவரங்களை தொடர்புடைய கூட்டமைப்புகள் அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்றுக்கொள்ளலாம். விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில் அடுத்த மாதம் (ஏப்ரல்)25-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.