சென்னை,
தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத் திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த் தொற்று மற்றும் பிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வருவாய் மாவட்ட வாரியான பொறுப்பு அமைச்சர்களில் கோவை மாவட்டத்திற்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமியை நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது.
கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அனைத்துத் துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனைகள் வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.