முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
68 ஆயிரம் எக்டேர் பாதிப்பு
நடப்பு சம்பா பருவத்தில் 17 லட்சத்து 46 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய கணக்கெடுப்பின்படி 68 ஆயிரத்து 652 எக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
வயல்களில் தேங்கிய நீரை வெளியேற்றுவதற்கு ஊரகத்துறை மற்றும் நீர்வளத்துறையுடன் இணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயன்ற அளவு பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உரிய நிவாரணம் நிச்சயம் வழங்கப்படும்
கிராம வாரியாக பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது. முழுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் நிச்சயமாக வழங்கப்படும்.
நாங்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் டெல்டா மாவட்டங்களில் ரூ.65 கோடி மதிப்பில் 4 ஆயிரம் கி.மீ. நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று உள்ளது. இதனால்தான் காவிரி நீர் கடைமடை வரை சென்றடைந்துள்ளது. தேங்கி நிற்கும் மழைநீர் வடிவதற்கும் இது சாதகமாக உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி 4 லட்சத்து 95 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்றுள்ளது. விவசாயிகளை கண்போல் காப்பாற்றுகின்ற அரசு தி.மு.க அரசு.
வடகிழக்கு பருவமழை 4 நாட்கள் அதிக அளவில் பெய்துள்ளது இதனை எதிர்நோக்கும் வகையில் கடந்த 4 மாதங்களாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.
முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறப்பு
இதில் சென்னையில் மட்டும் 720 கி.மீ. தூரத்திற்கு மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவையான நேரங்களில் உபரி நீர் உரிய முறையில் வெளியேற்றப்பட்டு உள்ளது.
கடந்த 2015 அ.தி.மு.க ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து எந்தவித முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டதால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும். அந்த அவல நிலை மீண்டும் ஏற்படாத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
நிவாரண முகாம்களில் தங்க வைப்பு
அந்த வகையில் முன்னெச்சரிக்கையாக 19 ஆயிரத்து 520 மரக்கிளைகள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் மரங்கள் விழுவது தடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையின் காரணமாக தாழ்வான பகுதியில் வசித்த 2 ஆயிரத்து 888 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் 44 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெரும் சேதம் தவிர்ப்பு
சென்னையில் 400 இடங்களில் மழைநீர் தேங்கி இருந்தது. அந்த இடங்களில் இருந்து மழை நீரை அகற்றும் பணி விரைவாக நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற அவல நிலையின் காரணமாக இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கடந்த நான்கரை மாதங்களில் தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக பெரும் மழையில் இருந்து சென்னை மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக நிரந்தர தீர்வு காணும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
இந்த பேரிடர் காலத்தில் ஒரு சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதற்கெல்லாம் நான் பதில் சொல்லி அரசியலாக்க விரும்பவில்லை.
மக்களை பாதுகாப்பது மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது என நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
வெள்ள மேலாண்மை குழு
சென்ற ஆட்சியில் சென்னையில், வடிகால்கள் சீரமைப்பு பணிகள் சரியான திட்டமிடல் இன்றி மேற்கொள்ளப்பட்டதால் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு வல்லுனர்களை கொண்டு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு விரைவில் கூடி சென்னை மாநகரில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கும். அதன்படி அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
டெல்டா பகுதிகளுக்கு நிரந்தர தீர்வு
இதேபோல் வெள்ள பாதிப்புகளில் இருந்து டெல்டா பகுதிகளை மீட்பதற்கு நிரந்தர தீர்வு காணப்படும். சென்ற அ.தி.மு.க. ஆட்சியில் டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணி செய்வதாக கூறி பலகோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது.
இது குறித்து தனி விசாரணை குழு அமைக்கப்பட்டு நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய குழு நிச்சயம் வரும்
நெல்லின் ஈரப்பதத்தை அதிகரித்து கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மழை, வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு நிச்சயம் தமிழகத்திற்கு வரும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.